×

மணப்பெண்களை தேவதையாக மாற்றும் ஆரி டிசைன்கள்!

நன்றி குங்குமம் தோழி

தை பிறந்தாலே தொடர்ந்து திருமண முகூர்த்தங்கள்தான். இதில் மணப்பெண்கள் தங்களின் மேக்கப், ஃபேஷியல்னு பிசியாக இருக்கிறார்களோ இல்லையோ அவர்களுக்காக பிளவுஸ் தைக்கும் டிசைனர்கள் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறந்து கொண்டு இருப்பார்கள்.

365 நாட்களிலும் முகூர்த்த நாள் இருந்தாலும் இல்லை என்றாலும் இவர்களின் தையல் மெஷின் ஓட்டம் மட்டும் ஓயாது. இதற்கு உதாரணமாக இருக்கிறார்கள் சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த சகோதரர்களான முகமத் ஷாமில் மற்றும் பாசித் பரீத். இவர்கள் இருவரும் கடந்த 11 வருடங்களுக்கு மேலாக டெய்லரிங் தொழிலில் குறிப்பாக இன்றைய பெண்களின் ஃபேவரைட் ஆரி டிசைன்களில் கொடி கட்டி பறந்து வரும் டிசைனர்களில் ஒருவர் என்று சொன்னால் மிகையாகாது.

‘‘புரசையில் 11 வருஷம் முன்பு நாலு பேர் கொண்ட சின்ன டெய்லரிங் கடைதான் ஆரம்பிச்சோம். இப்ப எங்களிடம் 45 பேருக்கு மேல் வேலை பார்க்கிறார்கள். குறிப்பாக ஆரி வேலைப்பாட்டிற்கு என தனி குழுவே இருக்கு’’ என்று பேசத் துவங்குகிறார் முகமத் ஷாமில். இவர் இன்றைய ஃபேஷன் மற்றும் ஆரி டிசைன் மேல் மணப்பெண்களுக்கு ஏற்பட்ட மோகம் குறித்து விளக்குகிறார்.

‘‘என்னுடைய அம்மா வீட்டில் தைப்பாங்க. அதைப் பார்த்துதான் நான் வளர்ந்தேன். அதனால் எனக்கு தையல் மேல் தனிப்பட்ட ஈடுபாடு ஏற்பட்டது. இதற்காக நான் முறையா பயிற்சி எல்லாம் போகல. ஒரு தையல் கடையில் வேலைக்கு சேர்ந்தேன். அங்குதான் கொஞ்சம் கொஞ்சமாக தையல் கலையை கற்றுக்கொண்டேன். அங்கு ஓரளவுக்கு தையல் குறித்த பயிற்சி எடுத்துக் ெகாண்ட பிறகு நானே சொந்தமா ஒரு தையல் கடையை ஆரம்பிச்சேன். சின்ன கடைதான். சாதாரண பிளவுஸ், சுடிதார் தைக்க ஆரம்பிச்சு, இப்ப பிரைடல் பிளவுஸ், லெஹங்கா, ஆரி வேலைப்பாடுன்னு எல்லா விதமான உடைகளும் தைத்து தருகிறோம்’’ என்றவர் லெஹங்கா, பிரைடல் உடைகள், ஆரி வேலைப்பாடுகளுக்கு என பிரத்யேகமான ஷோரூம் ஒன்றை திறந்துள்ளார்.

‘‘பொதுவாக ஒரு ஷோரூம் என்றால் அதில் எல்லாவிதமான உடைகள் இருக்கும். நாங்களும் அப்படித்தான் இதனை ஆரம்பித்து இருக்கிறோம். ஆனால் குறிப்பாக இங்கு மணப்பெண்களுக்கான உடைகளை பிரத்யேகமாக வைத்திருக்கிறோம். மேலும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைத்தும் தருகிறோம். இப்போது புடவை சிம்பிளாக இருந்தாலும் அதற்கான பிளவுஸ் கிராண்டாக இருக்க வேண்டும்னுதான் பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். மேலும் புடவை நிறத்திற்கு கான்ட்ராஸ்ட் பிளவுஸ்கள் அணிகிறார்கள். இந்த நிறத்திற்கு இப்படி கூட நிறங்கள் மேட்சிங் செய்ய முடியுமா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு மேட்சிங் பிளவுஸ்களை விரும்புகிறார்கள்.

மேலும் அதில் அழகான வேலைப்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனாலேயே எங்களின் ஷோரூமின் ஸ்பெஷல், ஆரி டிசைன் செய்யப்பட்ட பிளவுஸ் பிட்களுக்கு என தனிப்பட்ட செக் ஷன் உள்ளது. இங்கு பல வண்ண நிறங்களில் அழகான வேலைப்பாடு கொண்ட ஆரி டிசைன்கள் செய்யப்பட்ட பிளவுஸ் பிட்கள் இருக்கு. அதை அவர்களின் புடவையின் நிறத்திற்கு ஏற்ப மேட்சிங் செய்து கொள்ளலாம்.

காரணம், ஒரு பிளவுசில் ஆரி டிசைன் செய்து அதை தைத்துக் கொடுக்க குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று வாரத்திற்கு மேலாகும். ஆரி வேலைப்பாடு என்பது கைளால் செய்யப்படுவதால் அதற்கான நேரம் அவசியம் தேவை. அதே சமயம் உடனடியாக ஒரு விழாவிற்கு செல்ல வேண்டும். அதற்கு பிளவுஸ் ஒரே நாளில் வேண்டும் என்றால், ஆரி பிளவுஸ் பிட்கள் சிறந்த சாய்ஸ். டிசைன் செய்யப்பட்டு இருக்கும் இந்த பிட்களை நம்முடைய விருப்பத்திற்கு ஏற்ப ஒரே நாளில் தைத்துக் கொள்ளலாம்’’ என்றவர் இந்த இடத்தினை அடைய தன் உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு செயல்பட்டுள்ளார்.

‘‘என்னைப் பொறுத்தவரை என்னுடைய வாடிக்கையாளர்கள் திருப்தியாக செல்ல வேண்டும். காரணம், சுடிதார் கூட ஒருவருக்கு சரியாக அமைந்திடும். ஆனால் ஒரு பிளவுசின் அளவு மட்டும் சரியாக இல்லை என்றால், அவர்களை நாம் என்றைக்குமே திருப்திப்படுத்த முடியாது. அதனால் என்னைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்கள் நாங்க தைத்த பிளவுஸ்களை அணியும் போது அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி தெரிய வேண்டும்.

அதுதான் எங்களின் வெற்றி. ஒரு வேளை அவர்களுக்கு சரியான ஃபிட்டிங் இல்லை என்றாலும், அதை சரி செய்து கொடுப்பது எங்களின் கடமை. அதனால் நாங்க கடை ஆரம்பித்த போது வேறு எதைப்பற்றியும் சிந்திக்கவே இல்லை. வாடிக்கையாளர்களின் விருப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு மிகவும் கடுமையாக உழைத்தோம். அதற்கான பிரதிபலன் ஒருவர் மூலம் ஒருவர் என எங்களுக்கு வாடிக்கையாளர் வட்டம் அதிகமானது. சாதாரண தையல் கடையில் ஆரம்பித்த எங்களின் பயணம் தற்போது பிரைடல் டிசைனர் என்ற அளவிற்கு நாங்க வளர்ந்திருக்கிறோம்.

இந்த துறையை பொறுத்தவரை வாடிக்கையாளர்கள்தான் எங்களின் குருன்னு நான் சொல்வேன். அவங்கதான் புதுப்புது டிசைன்களோட வருவாங்க. நாம எதிர்பார்க்காத டிசைன் எல்லாம் கொண்டு வருவாங்க. அவங்க கேட்கும் டிசைனை நாம செய்ய முடியுமானு யோசிக்காம செய்து முடிச்சா கண்டிப்பா இந்த துறையில் சக்சஸ் பார்க்க முடியும். இப்போது எல்லாரும் ஆரி வேலைப்பாடு கொண்ட பிளவுஸ்தான் கேட்கிறாங்க. அதனாலேயே நாங்க ஒரு தனி டிசைனர் குழு அமைச்சிருக்கோம்.

அதில் பெண்கள்தான் அதிகம். எந்த ஒரு டிசைன் செய்தாலுமே நாங்க அனைவரும் குழுவா ஆலோசித்துதான் முடிவு எடுப்போம். அப்பதான் அந்த உடையை அழகா மாற்ற முடியும் என்பது என் கருத்து. எங்க ஷோரூமில் லெஹங்கா, சுடிதார், புடவைகள் என பல வகை உடைகள் இருக்கு. மேலும், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸும் செய்து தருகிறோம். எங்களிடம் லெஹங்கா ரூ.2000 முதல் ரூ.35 ஆயிரம் வரை உள்ளது. அதாவது திருமண விழா, பார்ட்டிகள் முதல் மணப்பெண்கள் அணியும் வரை லெஹங்கா பலவித டிசைன்களில் இருக்கு. இங்கு விற்பனைக்கு மட்டும் தானே தவிர நாங்க எந்த உடையும் வாடகைக்கு கொடுப்பதில்லை’’ என்றவர் தம்பியுடன் இணைந்து டெய்லரிங் மற்றும் ஷோரூம் இரண்டையும் நிர்வகித்து வருகிறார்.

‘‘ஃபேஷன் பொறுத்தவரை அது ஒவ்வொரு காலமும் மாற்றமடையும். இப்ப இருக்கும் டிரண்ட் நாங்க கடையை ஆரம்பித்த போது கிடையாது. அப்ப பிளவுசில் பார்டர் வச்சுதான் தைக்க சொல்வாங்க. ஆனால் இப்ப ஒரு பிளவுசில் பலவித டிசைன்களை விரும்புறாங்க. கையில் பார்டர் வச்சு தைச்சாலும் அதில் சின்னதா ஒரு எம்பிராய்டரி வேலைப்பாடு இருக்கணும்னு விரும்புறாங்க. அதிலும் குறிப்பாக ஆரிவேலைப்பாடு மேல் பெண்களின் மோகம் அதிகமாகிக் கொண்டே இருக்கு. காரணம், இது ஒருவரின் உடையை மேலும் அழகாக எடுத்துக்காட்டும். பெண்கள் தாங்கள் மற்றவர்களை விட அழகாக தெரிய வேண்டும்னு தான் விரும்புவாங்க. அதற்கு ஈடு இணையா ஆரி வேலைப்பாடு இருப்பதால் மேலும் இதில் 3டி எம்பாசிங் என நாம் விரும்பும் டிசைன்களை கொண்டு வர முடியும். இது பட்டு நூல் எம்பிராய்டரியின் அடுத்த கட்டம்.

ராஜா, ராணி காலத்தில் இதுேபான்ற வேலைப்பாடுகள் அதிகம் இருந்துள்ளது. அதைத்தான் நாம் மீண்டும் ஃபேஷனாக மாற்றி இருக்கிறோம். ஒரு உடையினை எவ்வளவு கிராண்டாக மாற்றி அமைக்க முடியுமோ அதனை இதில் செய்யலாம். இதற்கு பயன்படுத்தப்படும் ஊசியே வித்தியாசமா இருக்கும். மற்ற ஊசிகள் போல் காது இருக்காது. சின்ன வளைவு இருக்கும். அதைக் கொண்டு அழகான டிசைன்களை வடிக்கலாம்.

தையல் துறையை பொறுத்தவரை நம்முடைய திறமையை வெளிப்படுத்தினால் ஆண்டு முழுதும் பிசியாக இருக்கலாம். காரணம், பெண்களுக்கு உடைகள் மேல் மோகம் எப்போதும் இருக்கும். அவர்கள் புதுப்புது டிசைன்களில் உடைகளை அணிய விரும்புவார்கள். அதற்காகவேதான் நாங்க இருக்கிறோம். இப்போது பலர் லாங் மேக்சி அல்லது கவுன் போன்ற உடையினை அணிய விரும்புகிறார்கள். இன்றைய டிரண்ட் இது தான்.

இதை தெரிந்து கொண்டாலே இந்த துறையில் நாம் கண்டிப்பாக ஜெயிக்க முடியும். எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் சின்ன சரிவு இருக்கத்தான் செய்யும். அதை நாங்க கொரோனா காலத்தில் உணர்ந்தோம். கடை செயல்படல. வேலையாட்களுக்கு சம்பளம் கொடுக்கணும். அப்பதான் நாங்க புதுசா ஒரு கடை திறந்தோம். அதற்காக கொஞ்சம் அதிகம் இன்வெஸ்ட்மென்ட் செய்திருந்தோம். கடைசி வரை அந்த கடையை திறக்கவே முடியல. அந்த இரண்டு வருடம் கஷ்டப்பட்டாலும், நிலமை சீரானதும் கொஞ்சம் கொஞ்சமாக நாங்களும் முன்னேறிவிட்டோம். எங்களின் அடுத்த திட்டம் பட்டுப்புடவைகளுக்காகவே ஒரு பிரத்யேக ஷோரூம் அமைக்க வேண்டும் என்பதுதான்’’ என்றார் முகமத் ஷாமில்.

தொகுப்பு: ஷம்ரிதி

The post மணப்பெண்களை தேவதையாக மாற்றும் ஆரி டிசைன்கள்! appeared first on Dinakaran.

Tags : Ari ,kumkum ,Dinakaran ,
× RELATED குதிகால் வலி